காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த நவம்பர், டிசம்பர் ஆகிய இரு மாதங்களில், வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதில், 'மாண்டஸ்' புயல் காரணமாக, டிசம்பர் 10ம் தேதி கன மழை பெய்தது. இதன் காரணமாக, பாலாற்றின் கிளை ஆறான வேகவதியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதிகபட்சமாக, 4,000 கன அடி வரை, வெள்ள நீர் சென்றது. வெள்ளப்பெருக்கு காரணமாக, வேகவதி ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் உடைந்து சேதமானது.
தாட்டித்தோப்பு பகுதியில் இருந்த பாலம் உடைந்தது. அதேபோல, தாயார்குளம் பகுதியில் இருந்த இரு பாலமும், வெள்ள நீர் செல்ல தடையாக இருந்ததால், உடைக்கப்பட்டது.
இந்நிலையில், திருப்பருத்திக்குன்றம் கிராமத்தில் வேகவதி குறுக்கே இருக்கும் மற்றொரு தரைப்பாலம் சேதமதடைந்துள்ளது.
பாலத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பாலத்தின் இருபுறமும் தடுப்புகூட இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர்.
வேகவதி குறுக்கே சேதமான பாலங்களை காஞ்சிபுரம் மாநகராட்சி சீரமைத்து வரும் நிலையில், திருப்பருத்திக்குன்றம் பாலத்தையும் மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.