வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே வம்பன் நால்ரோட்டில் பா.ஜ.க, இளைஞரணி சார்பில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா, பொங்கல் விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வம்பன் நால்ரோட்டில் பா.ஜ.க, இளைஞரணி சார்பில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா, பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதில், பாஜ., ஒன்றிய தலைவர் சங்கிலி கருப்பன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம்அழகப்பன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சிகவிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராக, சிறுபான்மைப்பிரிவு தேசிய செயலாளர் வேலுhர் இப்ராஹிம் கலந்து கொண்டு பேசுகையில்:விவேகானந்தரின் பிறந்த நாளை தேசிய இளைஞர் எழுச்சி நாளாக பா.ஜ.க., மட்டுமே முன்னெடுக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை தருவதாக பொய்யான வாக்குறுதியளித்த தி.மு.க., ஆட்சியிலே, குடிபோதை, கஞ்சா போன்றவற்றில் சீரழிந்து கொண்டிருக்கும் இளைஞர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல பாஜ.க, முன்னெடுத்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதியளித்து வாக்குகளை பெற்ற தி.மு.க., நீட் பயிற்சி மையத்தை திறந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டுள்ள தி.மு.க., மது ஒழிப்பு, நீட் தேர்வு ரத்து, கரும்பு, நெல் விவசாயிகள் கண்ணீர் என திருட்டு மாடல் ஆட்சி நடத்தி வருகிறது.
தி.மு.க., ஒரு குடும்ப ஆட்சி. அதில் உள்ள மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர். ஆளுகின்ற இந்த மக்கள் விரோத போக்கு ஆட்சியை அகற்ற பொதுமக்கள் முடிவெடுத்துவிட்டனர். வருகின்ற 2024 சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு பெரிய சம்மட்டி அடியை பா.ஜ.க., அளிக்கும். தமிழகத்தில் நடந்து வரும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களை பா.ஜ.க., பேசி வரும் நிலையில், அதனை திசை திருப்புவதற்காக கவர்னர் ரவி குறித்து தி.மு.க.,வினர் பொய்யான விஷமத்தனத்தை பரப்பி வருகின்றனர்.
ஊழல் செய்யும் தி.மு.க., அமைச்சர்களின் பட்டியலை வெளியிடுவதற்காக, பா.ஜ.க., மாநில தலைவர் விவரங்களை சேகரித்து வருகிறார். விரைவில், அது வெளியிடப்படும். மக்களுக்கான தேவைகளைப்பற்றி பா.ஜ.க., நினைக்கிறதே தவிர, அவர்களை திசை திருப்ப பா.ஜ.க., விரும்பாது என்றார். இதில், மாவட்ட பொது செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.