காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில், நேற்று நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் பங்கேற்றனர்.
கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், புது மண் பானையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபட்டனர்.
அதை தொடர்ந்து, கல்லுாரி மாணவ - மாணவியர் தங்களது தனித்திறமை வெளிப்படுத்தும் போட்டிகளும், தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், வாள் வீச்சு உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. போகி பண்டிகை அன்று, தமிழக அரசு அறிவித்தபடி, புகையில்லா போகியை கொண்டாடுவோம் என, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
விழாவில், தமிழ்த் துறை தலைவர் சக்கரவர்த்தி, பொருளியல் துறை தலைவர் பழனிராஜ் மற்றும் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.