கிரேட்டர் நொய்டா:'ஆட்டோ எக்ஸ்போ' கண்காட்சியில், 'மாருதி சுசூகி' நிறுவனம், மொத்தம் மூன்று எஸ்.யு.வி., கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் மின்சார முன்மாதிரி காரான இ.வி.எக்ஸ், மற்றும் 'ப்ரான்க்ஸ், ஜிம்னி'ஆகிய மூன்றும் எஸ்.யு.வி., கார்களாகும்.
இதுகுறித்து, மாருதியின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிஷாஷி டக்யூச்சி கூறியதாவது:
அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார எஸ்.யு.வி.,யான இ.வி.எக்ஸ்., காரை ,2025ம் ஆண்டுக்குள் வெளியிட உள்ளோம். மேலும், மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், எண்ணெய் இறக்குமதியை குறைப்பது மற்றும் 2070க்குள் கார்பன் இல்லா சுற்றுச்சூழலை உருவாக்குவது ஆகிய இரண்டையும் செயல்படுத்த, 'ஹைபிரிட், சி.என்.ஜி., எத்தனால்' மற்றும் மின்சார தொழில்நுட்பங்களை ஆராய்ந்து வருகிறோம்.
அண்மைக்காலமாக, எஸ்.யு.வி., கார்களை, வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
'ஸ்போர்ட்டி லுக்'கில் வெளியான ப்ரான்க்ஸ் மற்றும் 'ஆப்ரோடு' மற்றும் 'ஆன்ரோடு'களில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் ஜிம்னி ஆகிய இரு வாகனங்களும், எங்களின் மற்ற எஸ்.யு.வி.,க்களைப் போல நிச்சயம் நேசிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.