மேட்டுப்பாளையம்:புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட வலியுறுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி, மேட்டுப்பாளையத்தில் நடந்தது.
தைப்பொங்கல் விழாவின் முதல் நாள், போகிப் பண்டிகை. இந்த நாளில் வீடுகளில் உள்ள உபயோகமற்ற பொருட்கள், பயன்படுத்திய பாய்கள், தலையணைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை, மக்கள் எரிப்பது வழக்கம்.
பல்வேறு இடங்களில் இது மாதிரி எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது. அதனால் பொது இடங்களிலும், வீதிகளில் உள்ள காலி இடங்களிலும், பொதுமக்கள் இப்பொருட்களை, எரிப்பதை தவிர்க்க வேண்டும். எரிக்க பயன்படுத்தும் பொருட்களை நகராட்சி துாய்மை பணியாளர்களிடமும், வாகனங்களிலும் போட வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தியது.
நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கிய பேரணியை, நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன், துணைத் தலைவர் அருள் வடிவு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணி காரமடை ரோடு வழியாக வனத்துறை அலுவலகத்தை அடைந்தது.
பேரணியில் நகராட்சி பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பொது இடங்களில் பொருட்களை எரித்து, மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தி வந்தனர்.