திருத்தணி:திருத்தணி- - பொதட்டூர்பேட்டை செல்லும் மாநில முதன்மை நெடுஞ்சாலையில் அமிர்தாபுரம் ஏரி உள்ளது. இந்த ஏரியை திருத்தணி நீர்வளத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
இந்த ஏரியில், தண்ணீர் இருந்தால், திருத்தணி நகராட்சிக்குட்பட்ட மேல்திருத்தணி, குமாரகுப்பம், முருகூர் மற்றும் பாபிரெட்டிப்பள்ளி ஆகிய இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.
இதுதவிர, இந்த ஏரியில் இருந்து, ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, முருகூர், குமாரகுப்பத்திற்கு நகராட்சி நிர்வாகம் குடிநீர் கொண்டு செல்கிறது.
தற்போது, பெய்த வடகிழக்கு பருவ மழை மற்றும் 'மாண்டஸ்' புயல் காரணமாக பெய்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் தண்ணீர் நிரப்பி காணப்படுகிறது.
இந்நிலையில், அமிர்தாபுரம் ஏரியில் சில சமூக விரோதிகள் கோழிக்கழிவுகள் மற்றும் குப்பை கொட்டுகின்றனர்.
இதனால், தண்ணீர் மாசுபடுவதுடன், மேற்கண்ட ஊர்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரும் மாசுபடும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் ஏரியில் கழிவுகள், குப்பை கொட்டு வதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.