சூலுார்:வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள், அவற்றை காப்பீடு செய்ய, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது; சூலுார் வட்டாரத்தில், பல எக்டர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், இழப்பீடு பெற, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் அமலில் உள்ளது. சூலுார் வட்டாரத்தில், இந்தாண்டு ராபி பருவத்தில், வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள், அவற்றை காப்பீடு செய்து கொள்வது அவசியம். பருவ மழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால், பயிர்கள் பாதிக்கப்பட்டால், காப்பீடு செய்திருந்தால் மட்டுமே உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு கிடைக்கும். ஏக்கருக்கு, 4 ஆயிரத்து, 873 ரூபாய் பிரிமீயம் செலுத்த வேண்டும். உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்கள், பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனி வாயிலாக பிரிமீயம் செலுத்தி, பதிவு செய்யலாம். காப்பீடு செய்ய கடைசி நாள், வரும், பிப்., 28 ஆகும். அதற்குள் காப்பீடு செய்து பயன் பெறலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.