ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தின் வடக்கு பகுதியில் காப்புக்காடு உள்ளது. 10 கி.மீ., துாரத்திற்கு மேலான இந்த மலைப்பகுதியில் மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
காப்புக்காட்டில் மான்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலையில், ஊருக்குள் தண்ணீர் தேடி வருவதும் வழக்கமாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், இந்த காப்புக்காட்டில் இருந்து, வங்கனுாருக்குள் நுழைந்த புள்ளிமான் ஒன்று, நாய்கள் கடித்ததில் பலியானது.
இந்நிலையில், எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே, ஆண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.
தண்ணீர் தேடி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே வந்த புள்ளிமானை. நாய்கள் கடித்து குதறியதில் இறந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர். மானின் சடலத்தை கைப்பற்றி, ஜே.சி.பி., இயந்திரத்தில் எடுத்து சென்றனர்.
கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின், மான் அடக்கம் செய்யப்பட்டது. சில நாட்களாக, எஸ்.வி.ஜி.புரம் கிராமத்திற்குள் மான்கள் தண்ணீர் தேடி வந்து செல்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
காப்புக்காட்டில், வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க, வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.