சூலுார்:கோவை அருகே மில் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
ஒடிசா மாநிலம் அரக்பாடார் பகுதியை சேர்ந்த மகாதேவ் கும்ஹார் மகன் சுபாஷ் கும்ஹார், 40. கடந்த, 10 ஆண்டுகளாக, கோவை மாவட்டம் சூலுார் அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள ஸ்பின்னிங் மில்லில், மெஷின் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். மனைவியுடன் மில் குடியிருப்பில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, பக்கத்து அறையில் தங்கியிருந்த தொழிலாளர்கள், அதிக ஒலியுடன் பாட்டு கேட்டதாக கூறப்படுகிறது. இதை சுபாஷ் தட்டி கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அதே மில்லில் வேலை செய்து வரும் சுபாஷின் தம்பி சுரேந்திரா பணி முடிந்து அங்கு வந்துள்ளார். அவர் இரு தரப்பையும் சமாதானம் செய்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த, மில்லின் மனித வளத்துறை மேலாளர் மார்ட்டின், அனைவரும் வேலைக்கு செல்லுங்கள் எனக்கூறியுள்ளார். இப்போதுதான் பணி முடிந்து வந்துள்ளோம். வேலைக்கு வர முடியாது என, தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இதனால், மார்டினுக்கும் , சுபாஷுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மார்ட்டின் ஆத்திரமடைந்து கத்தியால் சுபாஷை குத்தியுள்ளார். தடுக்க வந்த சுரேந்திராவுக்கும் கத்தி குத்து விழுந்தது.
இருவரும் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், சுபாஷ் உயிரிழந்தார். சுரேந்திரா சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சூலுார் போலீசார், வழக்குப்பதிவு செய்து, இருகூரை சேர்ந்த மேலாளர் மார்ட்டினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.