காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு| Vaikunda Ekadasi ceremony concluded at Karamadai Aranganathar temple | Dinamalar

காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு

Added : ஜன 12, 2023 | |
மேட்டுப்பாளையம்:காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, ராப்பத்து நிறைவு நாளுடன் முடிவடைந்தது.கோவை மாவட்டம், காரமடையில் வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா, விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம், 23ம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் விழா துவங்கியது. ஜன.2ம் தேதி வைகுண்ட
 காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு

மேட்டுப்பாளையம்:காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, ராப்பத்து நிறைவு நாளுடன் முடிவடைந்தது.

கோவை மாவட்டம், காரமடையில் வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா, விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம், 23ம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் விழா துவங்கியது. ஜன.2ம் தேதி வைகுண்ட ஏகாதசி என்னும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

பெரிய சேஷ வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, அரங்கநாத பெருமாள், சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து, நான்கு ரத வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதைத் தொடர்ந்து அன்று இரவு, திருவாய்மொழித் திருநாள் சாற்று முறை என்னும், ராப்பத்து நிகழ்ச்சி துவங்கியது. நேற்று முன் தினம் இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், சிறப்பு அலங்காரத்தில், மீண்டும் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு புண்ணிய வசனம், விஷ்வக்சேனர், கலச ஆவாஹனம், பஞ்ச சுத்த வேத மந்திரம் ஆகியவை சேவிக்கப்பட்டது.

பின்பு திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், இராமானுஜர் ஆகிய ஆழ்வார்களுக்கு சடாரி மரியாதை செய்யப்பட்டது. ராமானுஜர் நூற்று அந்தாதி, உபதேச ரத்தினமாலை ஆகிய பாசுரம் சேவிக்கப்பட்டது. நம்மாழ்வார் திருவடி தொழுதல் வைபவம் நடந்தது. சாற்றுமுறை நிறைவடைந்த பின்பு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் ஆஸ்தானம் சென்றார்.

விழாவில் கோயில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X