பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம், தடாகம் வட்டாரங்களில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருவதால், இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை தடாகம் ரோட்டில் கணுவாயிலிருந்து சின்னதடாகம் வரை தினமும் இரவு, 7:00 மணிக்கு மேல் காட்டுப்பன்றிகள் அடிக்கடி சாலையை கடக்கின்றன.
இரவு, 10:00 மணிக்கு மேல் கூட்டம், கூட்டமாக அலையும் காட்டு பன்றிகளால், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.
இதே போல மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து தெற்குப்பாளையம் பிரிவு வரை இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,' இரவு நேரங்களில் ஒரு சில காட்டுப் பன்றிகள் வாழை, தென்னந்தோப்புகளில் சுற்றி வந்தன.
தற்போது, இரவு முழுவதும் விடிய, விடிய தோப்புகளில் சுற்றி, வாழைகளின் அடியில் உள்ள தண்டுகளை உண்ண குழியை தோண்டுகின்றன. இதே போல தென்னங்கன்றுகளின் அடி பகுதிகளையும் தோண்டுகின்றன.
காட்டு பன்றிகளின் ஊடுருவலை தடுக்க முடியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் உள்ள காட்டு பன்றிகளை, அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கேரள அரசை போல, தமிழக வனத்துறை வாயிலாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் கொடுத்து, கிராம குழுக்கள் வாயிலாக, காட்டுப் பன்றிகளை அழிக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.