கருமத்தம்பட்டி:கணியூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் கத்தியால் குத்தி, பணம், மொபைல்போன்களை கொள்ளையடித்த கும்பலில் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
கணியூர் ஊராட்சி செல்லப்பம்பாளையம், சேடபாளையம், பொன்னாண்டாம்பாளையம், ஷீபா நகர் உள்ளிட்ட கிராமங்களில், கடந்த இரு நாட்களாக, மர்ம கும்பல் பட்டாக்கத்தியுடன் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் புகுந்து, மொபைல்போன்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து தப்பினர்.
நள்ளிரவில் பல இடங்களில் கைவரிசை காட்டிய கும்பலால், கிராம மக்கள் பீதியடைந்தனர். அந்த கும்பலில், ஒன்பது பேருக்கு மேல் இருந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். நேற்று தனிப்படை போலீசார், மூன்று சிறுவர்கள் உட்பட ஆறுபேரை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் கைது செய்து கருமத்தம்பட்டி ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.