சூலுார்:கோவை புறநகர் பகுதிகளான சூலுார், கருமத்தம்பட்டியில் அதிகரிக்கும் சாலை விபத்துகளால், உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக பயணம் செய்ய போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
கோவை மாவட்டத்தின் கிழக்கு புறநகர் பகுதிகளாக கருமத்தம்பட்டி, சூலுார், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
வளர்ந்து வரும் இப்பகுதிகளில் நாளுக்கு நாள் புதிய தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. அதற்கேற்ப மக்கள் தொகையும், நெருக்கமும் அதிகரித்துள்ளன.
சேலம்---கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் கருமத்தம்பட்டியும், திருச்சி--கோவை தேசிய நெடுஞ்சாலையில் சூலுாரும் உள்ளன. சூலுார் அருகே கேரளா செல்லும் நீலம்பூர் பை - பாஸ் ரோடு உள்ளது.
இப்பகுதிகளை சுற்றி பல கி.மீ.,தூரமுள்ள, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட அளவிலான பெரிய சாலைகள், பிரதான சாலைகளில் இருந்து கிராமங்களை இணைக்கும் கிராம சாலைகள் ஏராளமாக உள்ளன.
போக்குவரத்து அதிகரிப்பு
நகரம் முதல் கிராமம் வரை பல தொழிற்சாலைகள், விசைத்தறி கூடங்கள், பவுண்டரிகள், கோழிப் பண்ணைகள், உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுவதால், அனைத்து ரோடுகளிலும் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளன.
இரு சக்கர வாகனங்கள் முதல் கண்டெய்னர் லாரி வரை தினமும் ஒவ்வொரு ரோட்டிலும் இயக்கப்படுகின்றன.
வாகன போக்குவரத்து அதிகரிப்பு, விதிகளை பின்பற்றாமல் வேகமாக வாகனங்களை இயக்குதல், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுதல், உள்ளிட்ட காரணங்களால், தேசிய நெடுஞ்சாலைகள் முதல் கிராம சாலைகள் வரை விபத்துகள் அதிகரித்துள்ளன.
பலி எண்ணிக்கை உயர்வு
கருமத்தம்பட்டி சப் - டிவிஷனுக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி , சூலுார், சுல்தான்பேட்டை, செட்டிபாளையம், கோவில் பாளையம் உள்ளிட்ட ஐந்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் நடந்த சாலை விபத்துகளில், 173 பேர் இறந்துள்ளனர். 470 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 2021ல் 169 பேர் பலியாகி உள்ளனர். 349 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழப்பு அதிகம்
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகளை காட்டிலும் கிராம சாலைகளில் நடக்கும் விபத்துகளில் அதிகம் பேர் பலியாகியுள்ளனர். அதிவேகம், மது போதை, செல்போன் பேசிக்கொண்டு ஓட்டுதல், குறுகலான, தரமில்லாத சாலை, போதிய வெளிச்சம் இல்லாமை உள்ளிட்டவைகளின் காரணமாக கிராம சாலைகளில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
விழிப்புணர்வு அவசியம்
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளால், பல குடும்பங்கள் நிலை குலைந்துள்ளன. குடும்ப உறுப்பினரின் இழப்பை ஈடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
கை, கால்கள் ஊனமடைந்தவர்கள் படும் துன்பம் மற்ற குடும்ப உறுப்பினர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விதிகளை பின்பற்றி வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுவது குடும்பத்தின் எதிர்காலத்துக்கு நல்லது என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'புறநகர் பகுதிகளில் அதிகளவில் விபத்துகள் நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் மற்ற அரசு துறையினருடன் பேசி, பேரி கார்டுகள் வைத்தல், மின் விளக்கு வசதி செய்தல், ரோடுகளை சீரமைக்க அறிவுறுத்தி உள்ளோம். மேலும், விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவோர் மீது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கிறோம். அனைத்து பகுதிகளிலும் ரோந்து சென்று, விதிகளை மீறி இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கிறோம்' என்றனர்.