பந்தலுார்:பந்தலுார் அருகே மாங்கம்வயல் பகுதியில் புதிய பாலம் கட்டுமான பணி துவக்கப்பட்டது.
பொன்னானியிலிருந்து மாங்கம்வயல் வழியாக, அம்மன் காவு, கல்பரா, பிதர்காடு, பாட்ட வயல் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.
சாலையின் நடுவே ஆற்றை கடக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தரமற்ற முறையில், கட்டிய பாலம், 2019 பருவ மழையின் போது சேதமடைந்தது.
இதனால், கனரக வாகனங்கள் மற்றும் பசுந்தேயிலை, நேந்திரன் வாழை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில், பாலம் முழுமையாக இடியும் அபாய நிலையை எட்டியது. அதனை தொடர்ந்து 'நபார்டு' திட்டத்தின் கீழ், ஒரு கோடி 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதியபாலம் கட்டுமான பணி துவக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.