கூடலுார்:'முதுமலை நீர் நிலைகளில் தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதால், கோடையில் வன விலங்குகளுக்கான குடிநீர் தேவையில் தட்டுப்பாடு இருக்காது,' என, வனத்துறையினர் கூறினர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் குடிநீர் தேவையை மாயார் ஆறு, ஓம்பட்டா, கேம்ஹட் உள்ளிட்ட தடுப்பணைகள், பொன்னங்கிரி, இமால்லா உள்ளிட்ட நீர் தேக்கங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.
எனினும், கோடை வறட்சியில் பல பகுதிகளில் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதனை எதிர்கொள்ள, வனத்துறையினர் வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று சிமென்ட் தொட்டிகளில் ஊற்றி விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு சரியான நேரத்தில் துவங்கிய பருவமழை, தேவையான அளவு பெய்துள்ளதால் நீர்நிலைகளில் தேவையான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால், வரும் கோடையில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.
வனத்துறையினர் கூறுகையில்,'முதுமலையில் உள்ள நீர் நிலைகளில் தேவையான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால், வரும் கோடையில் விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்க வாய்ப்பில்லை. எனினும், தற்போது தொடரும் பனிப்பொழிவு, வெயிலின் தாக்கம் காரணமாக தாவரங்கள், புற்கள் கருகி வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. சரியான நேரத்தில் கோடை மழை பெய்தால், உணவு தட்டுப்பாடு பிரச்னையும் இருக்காது,' என்றனர்.