தமிழக கவர்னர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுடில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து, தி.மு.க., பிரமுகர்கள் நேற்று மனு அளித்தனர். இதற்கு விளக்கம் அளிக்க கவர்னர் ஆர்.என்.ரவி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபையில் கவர்னர் ரவி உரை நிகழ்த்தியபோது நடந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து, கவர்னர் பற்றி முறையீடு செய்வது என, தி.மு.க., தரப்பில் திட்டமிடப்பட்டது.
இதற்காக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தி.மு.க., மூத்த எம்.பி.,க்கள் பாலு, ராஜா, இளங்கோ, வில்சன் ஆகியோர் அடங்கிய ஐவர் குழுவினர், நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பேசினர்.
அப்போது, 'சீலிடப்பட்ட கவர்' ஒன்றை ஜனாதிபதியிடம் இவர்கள் அளித்தனர். இதன்பின், இந்த சந்திப்பு குறித்து பாலு கூறியதாவது:
சட்ட அமைச்சர் வாயிலாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கடிதத்தை ஜனாதிபதிக்கு கொடுத்து அனுப்பினார். அமைச்சரின் தலைமையின் கீழ் நாங்கள் சென்றோமே தவிர, வேறு ஒன்றும் இல்லை.ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது சீலிடப்பட்ட கவர். எனவே, அதில் உள்ள அந்த கடிதத்தில் என்ன விபரங்கள் இருந்தன என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. அது முழுக்க முழுக்க தமிழக அரசுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான விஷயம்.
இருப்பினும், கடந்த 9ம் தேதி சட்டசபையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம் என யூகிக்கிறோம். இந்த கடிதம், அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கும், சட்டசபை விதிகளுக்கும் மாறாக, கவர்னர் நடந்து கொண்ட விதம் குறித்ததாக இருக்கலாம்.
இக்குழுவினர் அரசுப்பூர்வமானதே தவிர, அரசியல் ரீதியிலானது அல்ல. இவர்கள், தமிழக அரசின் கருத்துக்களை மட்டுமே எடுத்து வந்தனர்.எதையும், அரசியல் ரீதியாக உடனடியாக செய்துவிட முடியாது. நாங்கள் எம்.பி.,க்கள் மட்டுமே. எங்களால் அரசியல் ரீதியிலான முடிவுகளை மேற்கொள்ள முடியாது.
கடிதத்தை எடுத்து வருவதற்காக மட்டுமே அமைச்சர் புதுடில்லி வந்தார்; கொடுத்தாகி விட்டது. இனி, ஜனாதிபதி என்ன நினைக்கிறாரோ, அதன்படி அவர் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கலாம்.
நாங்கள் கூறியதை மிகவும் கூர்ந்து கவனித்த ஜனாதிபதி, கடிதத்தையும் படித்துப் பார்த்தார். பின் எங்களிடம், 'பார்க்கலாம்' என பதிலளித்தார். இதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு நான் அர்த்தம் சொல்ல முடியாது.
இது, காலையில் கடை திறந்து, மாலையில் லாபம் பார்த்துவிடும் விவகாரம் அல்ல. நெளிவு சுளிவுடனும், கவனமாகவும், ஜாக்கிரதையாகவும் எடுக்க வேண்டிய முடிவு இது. ஜனாதிபதி என்ன முடிவு எடுப்பார் என்பதை நான் கூற முடியாது.
எம்.பி.,க்களாகிய நாங்கள் ஏற்கனவே தந்த கோரிக்கை மனுக்கள் அரசியல் ரீதியிலானவை. ஆனால் இந்த மனு, அரசு அலுவல் பூர்வமானது. இவ்வாறு அவர் கூறினார்.கவர்னர் ரவி மீது புகார் கூறி, தி.மு.க., பிரமுகர்கள் மனு அளித்த நிலையில், அதற்கு விளக்கம் அளிக்க கவர்னர் தயாராகி வருவதாக புதுடில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், கவர்னர் ரவி இன்று காலை 11:20 மணிக்கு, 'விஸ்தாரா ஏர்லைன்ஸ்' பயணியர் விமானத்தில், சென்னையில் இருந்து புதுடில்லி செல்கிறார். அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்த தகவல்களை தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கவர்னர் யாரை எல்லாம் சந்திக்க உள்ளார் என்ற விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.புதுடில்லி செல்லும் கவர்னர் நாளை இரவு 8:15 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணியர் விமானத்தில் சென்னை திரும்புகிறார்.
கடந்த 9ம் தேதி தமிழக சட்டசபையில் கவர்னர் ரவி உரையாற்றினார். அவர் உரையை துவக்கியபோதே, தி.மு.க., கூட்டணி கட்சியினர் கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.அவர் உரையாற்றியபோது, உரையில் இடம் பெற்றிருந்த, 'திராவிட மாடல் ஆட்சி' உள்ளிட்ட சில பகுதிகளை படிப்பதை தவிர்த்தார்; இத்துடன் சில பகுதிகளை இணைத்து பேசினார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் எழுந்து, சட்டசபை விதியை தளர்த்தி, 'கவர்னர் ரவி புதிதாக இணைத்து பேசிய பகுதிகள் சபையில் இடம் பெறாது. அச்சிட்ட உரை மட்டும் சபையில் இடம் பெறும்' என கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கவர்னர், கூட்டம் முடியும் முன், சட்டசபையில் இருந்து கோபமாக வெளியேறினார்.இதைத் தொடர்ந்து, தி.மு.க., பிரமுகர்கள் பொதுக் கூட்டங்களில், கவர்னரை வசைபாடினர்; கவர்னருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டினர்.
- நமது டில்லி நிருபர் -