விழுப்புரம் : விழுப்புரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் நீரில் மூழ்கி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த தென்னமாதேவிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 54; விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் சந்தியா, 22; இவர், பிளஸ் 2 படித்துவிட்டு, விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள பேக்குகள் தைக்கும் கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று அதிகாலை வீட்டிலிருந்து அருகே உள்ள நிலப்பகுதிக்கு, இயற்கை உபாதை கழிக்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியபோது அப்பகுதியில் உள்ள ஜெயச்சந்திரன் என்பவரது விவசாய நிலத்தின் கிணற்றில் தவறி விழுந்து, இறந்து கிடந்தது தெரியவந்தது.
விழுப்புரம் தீயணைப்புத் துறையினர் சந்தியாவின் உடலை மீட்டனர். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.