ஆர்.கே.பேட்டை:பொங்கலுக்கு இனிப்பு கூட்டும் வெல்லம் உற்பத்தி பரபரப்பாக நடந்து வருகிறது. விவசாயிகள் தங்களின் சொந்த உழைப்பில் தயாரிக்கப்பட்ட வெல்லத்தை பயன்படுத்தி, பொங்கல் வைக்க தயார் நிலையில் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த, தியாகாபுரம், ஜனகராஜகுப்பம், கதனநகரம், ராகவநாயுடுகுப்பம், ஆனந்தவல்லிபுரம் உள்ளிட்ட பகுதியில், கரும்பு பயிர் செய்யும் விவசாயிகள் தங்களின் சொந்த ஆலைகளில் வெல்லம் தயாரிக்கின்றனர்.
வயல்வெளியை ஒட்டி, பிரத்யேக குடில் அமைத்து, அதில் கைதேர்ந்த தொழிலாளர்களைக் கொண்டு, பாரம்பரியமாக வெல்லம் தயாரித்து வருகின்றனர்.
வெல்லப் பாகு தயாரிக்க உகந்த கரும்புச் சாறு கிடைப்பது இந்த பகுதியின் மண்வளத்தின் சிறப்பு. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக துவங்கிய வெல்லம் தயாரிப்பு, தற்போது பொங்கல் பண்டிகையின் போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பொங்கல் பண்டிகைக்கு தேவையான வெல்லத்தை, ஆலைகளில் இருந்து நேரடியாக வாங்கி வருகின்றனர். இதேபோல, ஆர்.கே.பேட்டை அடுத்த, ராஜாநகரம் கிராமத்தில் பொங்கல் பானை தயாரிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், சூளையில் சுட்டு எடுக்கப்பட்ட மண் பானைகளை, பொங்கல் பண்டிகையை ஒட்டி விற்பனைக்கு அனுப்பி வைப்பதில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.