பொன்னேரி:பருவம் தவறிய மழைப்பொழிவு, அதை தொடர்ந்து பனிப்பொழிவால் ஏற்பட்ட நோய் தாக்குதல் ஆகியவற்றால் நெற்பயிர்களின் வளர்ச்சி பாதித்து, அறுவடையின்போது மகசூல் குறைந்துள்ளதால், வருவாய் இழப்பை எண்ணி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டாரத்தில், சம்பா பருவத்திற்கு, 29 ஆயிரம் ஏக்கர் பரப்பில், நெல் பயிரிடப்பட்டு உள்ளது. விவசாயிகள் பாபட்லா பொன்னி, 1638, 1278 ஆகிய நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளனர்.
பதரான நெல்
பருவம் தவறி மழை பொழிந்ததால், தொடக்கத்தில் நெற்பயிர்கள் வளர்ச்சி பாதித்தது. நவம்பர் மாதத்தில் மழைப்பொழிவு எதிர்பார்த்த அளவில் இருந்ததால், நெற்பயிர்கள் சீரான வளர்ச்சியை பெற்றன.
கடந்த மாத இறுதியில், மழை பெய்து முடித்த, மறுநாளில் இருந்தே பனிப்பொழிவு தொடங்கியது. இந்த திடீர் பருவ நிலை மாற்றத்தால் 'குலை நோய்' மற்றும் 'பாக்டீரியல் இலை கருகல் நோய்' பாதிப்பு ஏற்பட்டது. நெற்பயிர்களின் வளர்ச்சி பாதித்து, நெல்மணிகளும் காய்ந்து, பதராக மாறின.
மகசூல் குறைவு
தற்போது நெற்பயிர்கள் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோளூர், தேவம்பட்டு, இலுப்பாக்கம், விடதண்டலம், ஆவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இயந்திரங்கள் உதவியுடன் அறுவடை பணிகள் நடைபெறுகின்றன.
நோய் தாக்குதல் ஏற்பட்ட விளைநிலங்களில் மகசூல் குறைந்து உள்ளன.
வழக்கமாக, ஒரு ஏக்கருக்கு, 1,800- - 2,200 கிலோ மகசூல் இருக்கும் நிலையில், தற்போது, 1,100- - 1,500 கிலோ மட்டுமே கிடைக்கின்றன.
ஒரு சில விளை நிலங்களில், 1,000 கிலோவிற்கு குறைவாகவும் மகசூல் கிடைக்கிறது.
இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை எண்ணி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உவர்ப்பு நீர்
இது குறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது:
உழவு, நடவு, மருந்து, அறுவடை என ஒரு ஏக்கருக்கு, 25- ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
'குலை நோய்' தாக்குதலால், கூடுதல் மருந்து செலவினங்களும் ஏற்பட்டது. தற்போது மகசூல் குறைந்து உள்ளதால் முதலீட்டுத் தொகையே கிடைக்குமா என்பது சந்தேகம். பயிர் காப்பீடு பெற்றுள்ளோம். இழப்பீடு கிடைக்குமா எனத் தெரியவில்லை.
மீஞ்சூர் வட்டாரத்தில் அதிகப்படியான கிராமங்கள் உவர்ப்பு நீர் பகுதிகளாக இருப்பதால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மழை நீரைக் கொண்டு விவசாயம் செய்யப்படுகிறது.
தற்போது மகசூல் பாதித்து உள்ளதால், ஒரு ஆண்டிற்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.
அறுவடை நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் 'இன்சூரன்ஸ்' அதிகாரிகள், வேளாண்மைத் துறையினர் உடனடியாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அறுவடை
இது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
திடீர் பருவ நிலை மாற்றத்தால், நெற்பயிர்களின் வளர்ச்சி பாதித்தது. வேளாண் ஆராய்ச்சியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். குலை நோய் தாக்குதல் ஏற்பட்ட நிலங்களில் மகசூல் குறைந்துள்ளது. தற்போதுதான் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன.
எந்தெந்த பகுதிகளில் விளைச்சல் குறைவு என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம். பாதிக்கபடுபவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.