ஆந்திரா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா கட்சி இடையே மீண்டும் கூட்டணி அமையும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது.
கூட்டணி
கடந்த ௨௦௧௯ தேர்தலில், மொத்தமுள்ள ௧௭௫ தொகுதிகளில், ௧௫௧ல் ஒய்.எஸ்.ஆர்.காங்., அமோக வெற்றியைப் பெற்றது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ௨௩ல் மட்டுமே வென்றது.
ஜன சேனா கட்சித் தலைவரான, 'பவர் ஸ்டார்' என்றழைக்கப்படும் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் இந்தத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்விஅடைந்தார். அதே நேரத்தில் அவருடைய கட்சி வேட்பாளர் ஒரு தொகுதியில் வென்றார். இது, பிரபல நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரான பவன் கல்யாணின் கட்சிக்கு கிடைத்தமுதல் வெற்றியாகும்.
கடந்த ௨௦௧௪ தேர்தலின்போது, சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் கட்சி மற்றும் பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்றன. இதன்பின், இந்தக் கூட்டணி முறிந்தது.
தற்போது சந்திரபாபு நாயுடு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் பங்கேற்ற இரண்டு நிகழ்ச்சிகளின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழந்தனர்.
நிபந்தனை
இதையடுத்து, மாநில அரசு சந்திரபாபு நாயுடுவின் கூட்டங்களுக்கு கடும் நிபந்தனைகள் விதித்துள்ளது.
இந்நிலையில், பவன் கல்யாண் சமீபத்தில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துப் பேசியுள்ளார். 'சந்திரபாபு நாயுடுவுக்கு மாநில அரசு கடும் நிபந்தனைகள் விதித்துள்ளது ஜனநாயகத்துக்கு எதிரானது. என் ஆதரவை தெரிவிக்கவே அவரை சந்தித்தேன்' என, பவன் கல்யாண் குறிப்பிட்டார்.
இதையடுத்து சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் இடையே மீண்டும் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவரும் பேசியதாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கனவே பா.ஜ.,வுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டு உள்ளார்.இதையடுத்து தன் கட்சியின் பெயரை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி என்பதை பாரத் ராஷ்ட்ரீய சமிதி என்று மாற்றினார்.
கட்சியின் பெயரை மாற்றியபின் முதல் பிரமாண்ட பொதுக் கூட்டத்தை, கம்மத்தில் வரும், ௧௮ம் தேதி நடத்த உள்ளார்.இதில் பங்கேற்க, புதுடில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வரான ஆம் ஆத்மியின் பகவந்த் சிங் மான், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், உத்தர பிரதேச முன்னாள் முதல்வரான சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -