கடலுார் : பொங்கல் பண்டிகை முன்னிட்டு, கடலுாரில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து, அரும்பு மற்றும் மல்லி ஒரு கிலோ ரூ. 2,000 க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகில் பூ மார்க்கெட் உள்ளது. கடலுார் மட்டுமின்றி சுற்று வட்டார கிராம பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரு சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், கடலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சீசன் இல்லாததால், வெளி மாவட்டஙகளில் இருந்து அதிக அளவில் பூக்கள் கடலுார் மார்க்கெட்டில் குவிக்கப்பட்டிருந்தது. விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் அரும்பு மற்றும் மல்லிகை ஒரு கிலோ ரூ.1,200 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ. 2,000 த்திற்கு விற்கப்பட்டது. மற்ற பூக்களும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. ரூ. 400க்கு விற்கப்பட்ட காக்கட்டான் ரூ.1,000க்கும், ரூ. 80க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி பூ ரூ.160க்கம், சம்மங்கி ரூ.100, வெள்ளை சாமந்தி ரூ. 140, தேன் சாமந்தி ரூ. 150 என, பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்திருந்தது.