விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவவியது.
விருத்தாசலம் நகரமன்ற கூட்டம் சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் ராணி தண்டபாணி முன்னிலை வகித்தார். கமிஷனர் சேகர் வரவேற்றார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
சந்திரகுமார் (அ.தி.மு.க.,): குடிநீர் வரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி, அ.தி.மு.க., கவுன்சிலர்களுடன் வெளிநடப்பு செய்தார்.
சிங்காரவேல் (பா.ம.க.,): திராவிட மாடல் ஆட்சியில், நான் கொடுத்த 35 கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றார். அப்போது, குறுக்கிட்ட தி.மு.க., கவுன்சிலர்கள் தி.மு.க., ஆட்சியை குறை கூறக்கூடாது.
பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க.,வினர் என்ன செய்தனர் என, கேட்டனர். இதற்கு, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இன்ஜியர் சிவசங்கரன்: சொத்து வரி கட்டினால் குடிநீர் இணைப்பு ஒரு வாரத்தில் வழங்கப்படும். மின்விளக்குகள் அமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜ்குமார் (தே.மு.தி.க.,): எம்.ஆர்.கே நகரில் மூன்று மாதங்களுக்கு முன் அமைத்த போர்வெல் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.
சேர்மன்: நெடுஞ்சாலை துறை அமைத்த போர்வெல்களில், மோட்டார் பொருத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசிடம் ரூ.20 கோடி கேட்டுள்ளோம். நிதி வந்தவுடன் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். வரி வசூல் ரூ.20 கோடி நிலுவையில் உள்ளது.
குமாரி முருகன் (பா.ம.க.,): மாதத்திற்கு ஒரு முறை கூட்டம் நடத்த வேண்டும். வரிவசூல் குறித்து உரிய விளக்கம் தராவிட்டால், வருவாய் ஆய்வாளர் வேறு இடத்திற்கு பணி மாற்றலாகி சென்றுவிட வேண்டும்.
சேர்மன்: வரி வசூல் எவ்வளவு நடந்துள்ளது என கவுன்சிலருக்கு தெரிவிக்கப்படும்.
சேகர் (த.வா.க.,): தற்போது தமிழக சட்டசபை கூட்டம் நடக்கிறது. விருத்தாசலத்தை தலைமை இடமாக கொண்டு மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் உறுதியளித்திருந்தார். இதுவரை நடவடிக்கை இல்லை. உடனடியாக தீர்மானம் நிறைவேற்றக்கோரி கூட்ட அரங்கில் அமர்ந்து தர்ணா போராட்டதில் ஈடுபட்டார்.
அப்போது, சேர்மன், துணை சேர்மன், கவுன்சிலர்கள் அனைவரும் கூட்ட அரங்கில் இருந்து வெளியே சென்றனர்.