திருவொற்றியூர், பூப்பந்து போட்டியில், மாநில அளவில் முதலிடம் பிடித்து, கத்திவாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் அசத்தியுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான, 63வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள், ஜன., 3 முதல் 5ம் தேதி வரை தர்மபுரி மாவட்டம், நல்லானுார் - ஜெயம் பொறியியல் கல்லுாரியில் நடைபெற்றன.
அதன்படி, பூப்பந்து உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற, 38 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின.
இதில், மாவட்ட அளவில் 'பால் பேட்மின்டன்' எனப்படும் பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்ற, திருவள்ளூர் - கத்திவாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் அணியினர், ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடினர்.
அதன்படி, முதல் போட்டியில் திருநெல்வேலி அணியினரை, 35 - 26, 35 - 19 என்ற கணக்கிலும், இரண்டாவது போட்டியில் திண்டுக்கல் அணியை, 35 - 32, 35 - 16 என்ற கணக்கிலும் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினர்.
காலிறுதியில், சேலம் அணியினரை 35 - 20, 35 - 19 என்ற கணக்கிலும், அரையிறுதியில் கிருஷ்ணகிரி அணியை, 35 - 15, 35 - 26 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.
இறுதி போட்டியில், பலம் வாய்ந்த மதுரை அணியுடன் பலப்பரீட்சை நடத்தினர். கடும் போட்டி நிலவிய நிலையில், 38 - 36, 33 - 35, 35 - 33, என்ற கணக்கில், கத்திவாக்கம் அரசு பள்ளி மாணவியர் அணி வெற்றிவாகை சூடியது.
மாநில அளவில், பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற, கத்திவாக்கம் அரசு பள்ளி மாணவியர் அணியினரை, பள்ளி தலைமை ஆசிரியர் கமலா, பயிற்சியாளர்கள் ராஜா, ராகுல், அரவிந்த் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.