கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையை கலெக்டர் திறந்து வைத்தார்.
கடலுார் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், கடலுாரில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளும் நவீன மயமாக்கப்படும் என, கடந்த ஆண்டு அரசு அறிவித்தது. அதன்படி கடலுார் உழவர் சந்தையை 72 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது.
அதற்கான திறப்பு விழா நேற்று காலை நடந்தது. மாநகராட்சி மேயர் சுந்தரி தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா, வேளாண் துணை இயக்குனர் பூங்கோதை, இணை இயக்குனர் கண்ணையா முன்னிலை வகித்தனர். துணை இயக்குனர் அருண்குமார் வரவேற்றார்.
கலெக்டர் பாலசுப்ரமணியம் உழவர் சந்தையை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு வருவதற்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.