விழுப்புரம் : முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் வரும் 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42, மாண்டல அளவில் 8 என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதில் 15 முதல் 35 வயது வரை பொது பிரிவினருக்கு கபடி, சிலம்பம், தடகளம், இறகு பந்து, கையுந்து பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. 12 முதல் 19 வயது வரை பள்ளி மாணவர்கள், 17 முதல் 25 வயது வரை கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.inல் அனைத்து விபரங்களையும் வரும் 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
மாவட்ட அளவிலான தனி நபர் போட்டிகளுக்கு முதல் பரிசு 3,000 ரூபாய், இரண்டாம் பரிசு 2,000 ரூபாய், மூன்றாம் பரிசு 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
குழு போட்டிகளில் கபடி, கூடைப்பந்து, கையுந்து பந்து போட்டிகளுக்கு முதல் பரிசு 36 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு, 24 ஆயிரம், மூன்றாம் பரிசு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
மேலும் கால்பந்து, ஹாக்கி போட்டிகளுக்கு முதல் பரிசு 54 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 36 ஆயிரம், மூன்றாம் பரிசு 18 ஆயிரம் ரூபாய் வீதம் ஒவ்வொரு அணிகளுக்கும் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.
போட்டிகள் தொடர்பான விபரங்களை, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தொலைபேசி 99435 09394, 86757 73551, 74017 03485 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்றிடலாம்.
இப்போட்டிகளில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பிரிவு வீரர்களும் பெரும் அளவில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.