கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி அடுத்துள்ள ஒத்திவாக்கத்தில், தமிழ்நாடு காவல்துறை அதிதீவிரப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானம் உள்ளது.
இங்கு 23வது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று, நேற்றுடன் நிறைவு பெற்றது.
இதில் வெற்றிபெற்ற போலீசாருக்கு, தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.சைலேந்திர பாபு, நேற்று பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் பங்கேற்று பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை, வெற்றி பெற்ற அனைத்து மாநில காவல் துறையினருக்கும் வழங்க உள்ளார்.
மேலும், ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மேம்படுத்தப்படும்.
தமிழக காவல் துறையில் புதிதாக 10 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
1,000 சப் - -இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் நிரந்தரமாக விரைவில் பணியமர்த்தப்படும் போது, தமிழக காவல்துறை இளமையான காவல் துறையாக மாறும்.
மேலும் 81 துணை காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக் கூடாது.
படித்து வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில், இளைஞர்கள் இருக்கும் போது, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.