காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் உள்ள சர்வே எண்களை, 'ஆன்லைனில்' மாற்றும் பணிகள், 80 சதவீதம் முடிந்துள்ளதால், பட்டா சம்பந்தமான சேவைகளுக்கு, பொதுமக்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
வருவாய் துறையின் தமிழ் நிலம் இணைதளத்தில், ஏற்கனவே நஞ்சை, புஞ்சை, மானாவாரி உள்ளிட்ட அனைத்து வகை நிலங்களும் பதிவேற்றப்பட்டு, நவீனமயமாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
ஆனால், நகர நில வரித் திட்ட வருவாய் துறை பணிகள், இணையதளத்தில் முழுமையாக பதிவிடாமல் இருந்தது. இதற்காக, நகர் புறங்களில் நகர நில வரித் திட்டத்துக்கான அலுவலகம் தனியாக துவங்கப்பட்டது.
திட்ட அலுவலகம்
காஞ்சிபுரத்தில், மாநகராட்சி அலுவலகத்தில், தரைத்தளத்தில் இயங்கும் நகர நில வரித் திட்ட அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் நகர்ப் புறத்தில் உள்ள சொத்துக்களுக்கு பட்டா பெறுதல், பட்டா பெயர் மாறுதல், 'சப் - டிவிஷன்' செய்தல் உள்ளிட்ட வருவாய் துறை சம்பந்தமான பணிகள், இதற்கென தனி வட்டாட்சியர் ஒருவரும், சர்வேயர் உள்ளிட்ட சில ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அலுவலகம், நில அளவைத் துறையின் உதவி இயக்குனர் அலுவலகம் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
காஞ்சிபுரம் நகரில் உள்ள சர்வே எண்களின், பட்டா, புறம்போக்கு நிலங்களின் விபரங்களை ஆன்லைனில் மாற்றி, காஞ்சிபுரம் ரெகுலர் தாசில்தாரிடம் ஒப்படைக்கவே இந்தப் பிரிவு பல ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கப்பட்டது.
இதன் வாயிலாக, நிலத்தின் தன்மை, வகைப்பாடு, பட்டாதாரர் பெயர், அரசு நிலம் விபரம், நிலத்தின் அளவு போன்ற அனைத்து தகவல்களும் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டு வந்தது.
அதன்படி, காஞ்சிபுரம் நகரின் ஒவ்வொரு சர்வே எண்களுக்கான விபரங்களையும் ஆன்லைனில் மாற்றும் பணிகள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் இப்போதுதான் ஓரளவு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஐந்து வார்டுகள்
காஞ்சிபுரம் நகரத்தை பொறுத்தவரையில், பிள்ளையார்பாளையம், சின்ன காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம், ஒலிமுகமதுபேட்டை போன்ற பகுதிகளை, நகர நில வரித் திட்ட அலுவலகம் ஐந்து வார்டாக பிரித்துள்ளது.
சர்வே எண்களின் ஒவ்வொரு விபரங்களையும் ஆன்லைனில் மாற்றி, பட்டா பெறாதவர்களுக்கு பட்டா வழங்கி, ஒவ்வொரு வார்டாக, ரெகுலர் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வந்துள்ளது.
நகரில் உள்ள மொத்தமுள்ள ஐந்து வார்டில், நான்கு வார்டுக்கான பணிகள் முடிந்து, ரெகுலர் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், மூன்றாவது வார்டுக்கான பணிகள் முடிந்து, ரெகுலர் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது வார்டு, பிள்ளையார்பாளையம் பகுதிகளை உள்ளடக்கியது.
நேரடியாக முடியாது
மொத்தமுள்ள ஐந்து வார்டுகளில், 1, 2, 3, 5 ஆகிய வார்டுக்கான பணிகள் முடிந்துள்ளன. நகர் முழுதும், பட்டா மற்றும் அரசு புறம்போக்கு கணக்கில், 42 ஆயிரம் சர்வே எண்கள் உள்ளன. இதில், நான்காவது வார்டுக்கான பணிகள் இப்போது துவங்கியுள்ளன.
இந்த நான்காவது வார்டில் பெரிய காஞ்சிபுரத்தின் சில பகுதிகள், ஒலிமுகமது பேட்டை உள்ளிட்ட இடங்கள் இடம் பெறுகின்றன.
இந்த நான்காவது வார்டுக்கான பணிகள் துவங்கியுள்ளன. இதில், 13 ஆயிரத்து 500 சர்வே எண்கள் உள்ளன. இந்த சர்வே எண்களையும் ஆன்லைனில் மாற்றி, ரெகுலர் தாசில்தாரிடம் ஒப்படைத்தால், நகர நில வரித் திட்ட அலுவலகத்தின் பணிகள் முடியும்.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் நகரின் அனைத்து பகுதிகளில் உள்ள சர்வே எண்களையும் ஆன்லைன் வாயிலாக மாற்றி, ரெகுலர் தாசில்தாரிடம் ஒப்படைத்துவிட்டால், நகர நில வரித் திட்டப் பணிகள் முடியும்.
அதன்பின் காஞ்சிபுரம் நகர மக்கள், பட்டா சம்பந்தமான அனைத்து பணிகளும், தாசில்தார் அலுவலகம் வாயிலாக பெற வேண்டும். மொத்தமுள்ள ஐந்து வார்டுகளில், நான்கு வார்டுகள் ரெகுலர் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
இந்த நான்கு வார்டுகளில் உள்ள பொதுமக்கள், பட்டா பெயர் மாறுதல், சப்- டிவிஷன் போன்ற சேவைகளுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக தான் விண்ணப்பிக்க முடியும். நேரடியாக இனி விண்ணப்பிக்க முடியாது.
நகரில் 4வது வார்டு பணிகள் இப்போது தான் துவங்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி பொதுமக்கள் மட்டும், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பட்டா சம்பந்தமாக அணுகலாம்.
மற்ற பகுதியினர், பட்டா சம்பந்தமான அனைத்து பணிகளும் ரெகுலர் தாசில்தாரை தொடர்பு கொள்ளலாம்.
ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என்பதால், இனி சிரமம் கிடையாது. பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement