கோடிக்கணக்கான வேலைகள்
சாத்தியமா இல்லையா?
ஆசிரியர்: ஏ.வி.வரதராஜன்
பக்கம்: 360, விலை: ரூ.310
வெளியீடு: ஜீரோ டிகிரி பப்ளிஷிங்
*
கோவையைச் சேர்ந்த அனுபவமிக்க வெற்றிகரமான தொழிலதிபரான வரதராஜன் எழுதியுள்ள நுால். தமிழகத்தில் தொழில் துவங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், அதற்கு தடையாக உள்ள காரணிகள் பற்றியும் அனுபவப் பூர்வமாக எழுதியுள்ளார். விவசாயம், நிலவகைப்பாடு, பதிவுக் கொள்கைகள், வீட்டு வசதி, வங்கிக் கடன் கொள்கைகள், கறுப்புப் பணம், திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை அலசுகிறது.
---
பெரிய கேள்விகள் சிறிய பதில்கள்
ஆசிரியர்: சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
பக்கம்: 240, விலை: ரூ.250
வெளியீடு: ஈகிள் பிரஸ்
-
தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு, ஏற்கனவே பல சுயமுன்னேற்ற நுால்களை எழுதி, வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர். இந்நிலையில், இளைஞர்களின் பல கேள்விகளுக்கு தன் அனுபவத்தால், எளிய முறையில், சமூக அக்கறையுடன் பதில் கூறியுள்ளார். 44 அத்தியாயங்கள் நவரத்தினம் போல அமைந்துள்ளன. 'குழந்தைகளும் இளைஞர்களும் கேள்வி கேட்டால் தான் சிந்தனை வளம் பெறும். அதை துாண்டுவதே இதன் நோக்கம்' என்கிறார் ஆசிரியர்.
-
ஆராச்சார்
ஆசிரியர்: கே.ஆர்.மீரா / மோ.செந்தில்குமார்
பக்கம்: 782, விலை: ரூ. 750
வெளியீடு: சாகித்ய அகாடமி
-
மேற்கு வங்கத்தில் துாக்குத் தண்டனை நிறைவேற்றும் தொழிலை பரம்பரையாகச் செயயும் குடும்பத்தில் உள்ள 22 வயது சேதனாவின் பார்வையில் எழுதப்பட்ட மலையாள நாவல். இதை, தமிழில் மொழி பெயர்த்தவர் மோ.செந்தில்குமார். காதலின் துாக்குக்கயிறு இறுகி மூச்சுத்திணறும் ஆராச்சார், விளிம்பு நிலை பெண்ணின் குரலாய் ஒலிக்கிறது. இதில் ஊடக அரசியல், சமூக அவலங்கள், சாதி, பாலின கோட்பாடுகள் நுட்பமாக அலசப்பட்டுள்ளன.
--
கிழவியும் பூனையும்
ஆசிரியர்: சுப்புராவ்
பக்கம்: 96, விலை: ரூ. 95
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
*
ஆசியாவின் பழமையான நாகரிகம் உள்ள அர்மீனியாவில், பாட்டிகள், குழந்தைகளுக்குச் சொன்ன சுவாரஸ்யமான கதைகளின் மொழிபெயர்ப்பாக இந்த நுால் உள்ளது. சிறுவர்களுக்கு ஏற்ற வகையில், பூனைகளும் கரடிகளும், ஓநாய்களும் எலிகளும், மாய மோதிரங்களும் கடல் கன்னிகளும் என பல்வேறு தலைப்புகளில் வேடிக்கைகள் நிறைந்ததாக உள்ளன.
--
வண்ணச்சீரடி
ஆசிரியர்: மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.,
பக்கம்: 354, விலை: ரூ. 450
வெளியீடு: அகநி
இந்தாண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர், மு.ராஜேந்திரன். இவர், கல்வெட்டு, செப்பேடுகள், சுவடிகளின் வாயிலாகவும், கள ஆய்வின் வாயிலாகவும் வரலாற்றை எழுதுபவர். இந்த நுால், கண்ணகி கோவிலின் வரலாறு, கேரள அரசின் ஓர வஞ்சனை, தமிழர்களின் வழிபாட்டு உரிமை, மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம், வழிமுறைகளை விளக்குகிறது.