பங்குச்சந்தை வர்த்தகம், பல்பொருள் வர்த்தகம், இதழியல் துறை அனுபவம் என, தன் வாழ்வின் ஓட்டத்தில், பல தடங்களைக் கடந்தவர் ஜீவகரிகாலன்.
தற்போது, 'யாவரும்.காம்' என்ற இணைய இதழின் ஆசிரியராகவும், 'யாவரும்' என்ற பதிப்பக நிறுவனராகவும் உள்ளார். எழுத்தாளர்களாக பலரை அறிமுகப்படுத்தி வருகிறார். அவரிடம் பேசியதில் இருந்து...
இணைய இதழ் துவங்கியது ஏன்? எப்படி?
இலக்கியம் படிப்பதில் கிடைக்கும் ஆர்வமும், படைப்பதில் கிடைக்கும் வேட்கையும் தான், முதல் புள்ளியாக இருந்தது. இலக்கியத்துக்கான சிற்றிதழாகத் துவக்க திட்டமிட்ட போது, ஏற்கனவே வெற்றிகரமான சிற்றிதழ்கள் முடங்கிய காரணம் பொருளாதாரம் தான்.
ஆனாலும், படைப்பில் எந்தவித சமரசமும் இல்லாமல் இயங்கி, பல சிற்றிதழ்களை நடத்தியோரின் நெஞ்சுரத்தைப் பார்த்ததும் வியப்பு ஏற்பட்டது. அதனால், இடையில் விடாமல், தொடர்ந்து ஒரு சிற்றிதழை நடத்த வேண்டும் என்ற வைராக்கியத்தால் பிறந்தது 'யாவரும்.காம்' இணைய இதழ்.
இணைய இதழ் நடத்துவது எளிதா?
அப்படி இல்லை. ஒரு இதழை வார இதழாகவோ, மாத இதழாகவோ நடத்த பலர் முற்பட்டனர். ஆனால், நான் அதை, காலம் நிர்ணயிக்காத கலைப்படைப்புகளை பதிவேற்றும் இதழாக நடத்த திட்டமிட்டேன்.
அடுத்ததாக, அச்சிதழில் ஏற்படும் நஷ்டம் தவிர்க்கப்படும் என்பதால், லாபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இயங்க முடிகிறது. அதே நேரம், இதழுக்கான அனைத்து பணிகளும் இதிலும் உள்ளன.
உங்களுக்கு உதவுவது?
நண்பர்களின் உதவி இல்லாமல் இதை நடத்துவது எளிதல்ல.
மின்னிதழ் வாசிப்பும், தேவையும் எப்படி உள்ளது?
நான், 2012லேயே மின்னிதழ் துவங்கிவிட்டேன். என்றாலும், கொரோனா பரவலின் போது தான் நிறைய பேர் வாசிக்கவும், படைப்புகளை அனுப்பவும் துவங்கினர். புதிய எழுத்தாளர்கள் புதிய சிந்தனையுடன் எழுதத் துவங்கினர். தற்போது நிறைய பேரிடம் சென்றிருப்பது, மகிழ்ச்சியாக உள்ளது. புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, எழுத்தின் தொடர்ச்சியை நிலைநிறுத்துவது தானே, மின்னிதழின் முக்கியப்பணி. அதை சரியாகவே செய்கிறோம்.
பதிப்பகப் பணி?
மின்னிதழ்களில் வெளியாகும் சிறந்த சிறுகதைகள், நாவல்கள் உள்ளிட்டவற்றை, யாவரும் பதிப்பகத்தின் வாயிலாக பதிப்பித்து பரவலாக்குகிறோம்.
மின்னிதழின் எதிர்காலம்?
எதிர்காலத்தில் மின்னிதழ்களைத் தவிர்க்க முடியாது. பா.ராவின் 'மெட்ராஸ் பேப்பர்' இணையதளம்போல, வர்த்தக இதழ்கள் அதிகம் வரும். அதனால் எழுத்தாளர்களுக்கு வருவாயும், அங்கீகாரமும் கிடைக்கும். யாவரும் மின்னிதழும் கட்டண இதழாக மாறும் வாய்ப்பு உள்ளது.
-- நமது நிருபர் --