திண்டிவனம் : திண்டிவனம் அருகே வீடு புகுந்து நகைகளை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த வட சிறுவலுார் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். லாரி டிரைவர். இவரது மனைவி செந்தாமரை, 21; கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பாண்டியன் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கடந்த மாதம் 27ம் தேதி, செந்தாமரை, குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தவாசி அடுத்த சோகத்துார் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் செந்தாமரையின் மாமனார் ராஜேந்திரன், மாமியார் லட்சுமி மட்டும் இருந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் பகல் நேரத்தில் விவசாய கூலி வேலைக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஊருக்குத் திரும்பிய செந்தாமரை பீரோவைத் திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த 11 கிராம் நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து செந்தாமரை அளித்த புகாரின் பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.