விருகம்பாக்கம் விருகம்பாக்கத்தில், சாலையில் மாடுகள் கட்டப்படும் பிரச்னைக்கு மாநகராட்சி அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், கோயம்பேடு சந்தை மற்றும் பல்வேறு பகுதிகளில், சாலைகளில் அதிகமாக மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், சாலையில் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதியை எதிர்கொள்கின்றனர்.
கோடம்பாக்கம் மண்டலம், விருகம்பாக்கம் காமராஜர் சாலை மற்றும் பெருமாள் கோவில் தெருவிலும், சிலர் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள், அந்த பசு மாடுகளை சாலையோரம் கட்டுவதால், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.