கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு மாவட்டம் வண்டலுார் அருகில் உள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, தென் மாவட்டங்களுக்கு மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் லட்சுமி நாராயணன் கூறியதாவது:
தென் மாவட்ட மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். அவர்களில் பலர், அரசு பேருந்துகளில் செல்வதற்கு ஆன் லைனிலும், நேரிலும் முன்பதிவு செய்துள்ளனர். தாம்பரம், பெருங்களத்துார், வண்டலூர், நந்திவரம்- கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லுார், படப்பை, ஸ்ரீபெரும்புதுார், கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், கோயம்பேடு செல்ல தேவையில்லை. அவர்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் குறித்த நேரத்திற்கு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கு பயணியரை ஏற்றிச் செல்லும்.
குறிப்பாக திருச்சி, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், மதுரை, தேனி, பாண்டிச்சேரி, கோயம்புத்துார், கன்னியாகுமரி, தூத்துக்குடி, பாபநாசம், ஆலங்குளம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் அரசு அதிவிரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து பயணியரை ஏற்றி செல்லும். பயணியர் இதை பயன் படுத்திக் கொள்ளலாம்.
பொங்கலை ஒட்டி, மூன்று தினங்களுக்கு பொங்கல் சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. பயணியருக்கு இருக்கை வசதி, கழிப்பிடம், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள், சிறிய உணவகங்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு பகலாக கூடுவாஞ்சேரி போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர்.
முன் பதிவு செய்யாத பயணியர் பேருந்து நிலையத்தில் உள்ள உதவி மேலாளரை தொடர்பு கொண்டு, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்தில் காலி இருக்கைகள் இருந்தால், பதிவு செய்து செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.