சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில், குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு, 10க்கும் மேற்பட்ட தெருக்களில், அதிக அளவில் குப்பை குவிந்துள்ளது.
இதனால், துர்நாற்றம் வீசுகிறது. இந்த சுகாதார சீர்கேட்டால், தொற்றுநோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில், குப்பை முறையாக அகற்றப்படுவதில்லை என, குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் சிலர் கூறியதாவது:
சீனிவாசபுரம் பகுதி முழுக்கவே, குப்பை பிரச்னை பல மாதங்களாக உள்ளது. இந்த பகுதியில் குவியும் குப்பை உடனடியாக அகற்றப்படுவதில்லை.
இதனால், நோய்த்தொற்று அபாயம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
இந்த பிரச்னை குறித்து புகார் தெரிவித்தாலும், பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.