காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், தொண்டை மண்டல ஆதீனம் மடத்திற்கு சொந்தமான செனையில் உள்ள 14. 5 கோடி ரூபாய் இடத்தை அறநிலையத் துறையினர் மீட்டனர்.
காஞ்சிபுரத்தில், பழமையான தொண்டை மண்டல ஆதீனம் மடம் உள்ளது. இந்த மடத்திற்கு, பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. சென்னை, புரசைவாக்கம் வேளாளர் தெருவில், 5,862 சதுர அடி இடம், இந்த மடத்துக்கு சொந்தமானது. அந்த இடத்தை, சேக்கிழார் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பினர் பயன்படுத்தி வந்துள்ளனர்.
அந்த இடத்திற்கான வாடகை, 25 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. தற்போது அந்த இடத்தை, கார் நிறுத்துவதற்கு வாடகை வசூல் செய்து வந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இடத்தை மீட்க மடம் சார்பில் முயற்சி செய்தனர். பல்வேறு காரணங்களால் தடை ஏற்பட்டு வந்தது..
ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவுப்படி, அந்த இடம் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. அப்போது அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துரத்னவேலு மற்றும் செயல் அலுவலர்கள் கோவில் பணியாளர்கள், தொண்டை மண்டல மடம் நிர்வாகிகள் உடன் இருந்தனர். அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு 14. 5 கோடி ரூபாய்.