ஊட்டி:ஊட்டியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வந்த டவர் கட்டுமானத்தை நகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில், நகராட்சி சார்பில் விதிமீறிய கட்டடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி அரசு மருத்துவமனை சாலையோரம், நான்காவது மாடியில் தனியார் சார்பில் 'டவர்' அமைக்கப்பட்டு வருவதாக நகராட்சிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
நகராட்சி கமிஷனர் காந்திராஜ் உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலர் ஜெயவேல், நகரமைப்பு ஆய்வாளர் மீனாட்சி மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டர். எவ்வித அனுமதியின்றி, டவர் அமைப்பதற்கான கட்டுமானம் அமைத்தது தெரியவந்தது. அதனை நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றனர்.
நகரமைப்பு ஆய்வாளர் மீனாட்சி கூறுகையில், ''அரசு மருத்துவமனை சாலையில் அபிஷேக் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், 4 வது மாடியில் எவ்வித அனுமதி பெறாமல் 'டவர்' அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடந்ததால், நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டது,'' என்றார்.