திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த படூரில் உள்ள பேராசிரியர் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரியில், பொங்கல் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கல்லுாரியின் தலைவர் புகழேந்தி தனபாலன் தலைமை வகித்தார்.
கல்லுாரி இயக்குனர்ஸ்ரீதேவி புகழேந்தி, பச்சையப்பன் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் கந்தசாமி, சென்னைப் பல்கலைக்கழக கனிம வேதியியல் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி முதல்வர் பியூலா பத்மாவதி வரவேற்றார். கல்லுாரி வளாகத்தில் வண்ணக் கோலங்களுடன், கரும்புகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
மண்பானையில் பொங்கலிடப்பட்டு, அதனைப் பிரசாதமாக படைத்து வழிபாடு நடந்தது.
இக்கல்லுாரியை சார்ந்த மாணவ - மாணவியருக்கும், மற்ற தனியார் மற்றும்அரசுப் பள்ளி மாணவ - மாணவியருக்கும், ஓவியப்போட்டி, கோலப் போட்டி, களிமண் சிற்பம் செய்தல், சாக்குப்பை ஓட்டம், கபடி, கயிறு இழுத்தல் போட்டி, சிலம்பம், மாட்டு வண்டி ஓட்டுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, தமிழர்களின் கலைகளை நினைவுகூறும் வகையில், கரகாட்டம், கும்மியடி, மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் காவல் துணை ஆணையர் ரவிக்குமரன், திருப்போரூர் ஒன்றிய சேர்மன் இதயவர்மன், செங்கல்பட்டு மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, துணை இயக்குனர் சங்கீதா ஆகியோர் பங்கேற்று, போட்டிகளில் மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கினர்.
பல்வேறு வகை போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லுாரி சார்ந்த மாணவர்களுக்கு முதல் பரிசாக தங்கப் பதக்கமும், இரண்டாம் பரிசாக வெள்ளிப் பதக்கமும், அதிக வெற்றிகள் பெற்ற பாடப்பிரிவுத் துறைக்கு சுழற்கோப்பையும் வழங்கப்பட்டன.
அதேபோல, பள்ளி சார்ந்த மாணவர்களுக்கு முதல் பரிசாக 5,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 2,500 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள்புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.