போரூர், போரூரில், பொலிவிழந்து காணப்படும் மாநகராட்சி பூங்காவை, 22 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
வளசரவாக்கம் மண்டலம், 153வது வார்டு போரூர் ராமகிருஷ்ணா நகரில், மாநகராட்சி பூங்கா அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இப்பூங்காவில் உள்ள உபகரணங்கள் உடைந்து, பொலிவிழந்து காணப்பட்டது.
இதையடுத்து, பூங்காவை புதுப்பிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, 153வது வார்டு கவுன்சிலர் சாந்தி ராமலிங்கம் நிதியில் இருந்து, 22 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்காவை புதுப்பிக்க ஒப்பந்தம் கோரப்பட்டது.
இதற்கான பணிகளை, மண்டலக் குழு தலைவர் ராஜன் மற்றும் மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பூங்கா புதுப்பிக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.