குன்னுார்:குன்னுாரில் கூட்ட நெரிசல் மிகுந்த 'மவுண்ட்' ரோட்டில் கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் சாலையோரம் ஆட்டோக்களை நிறுத்த போலீசார் அனுமதித்தனர். அதில், பெட்ரோல் பங்க் எதிர்புறம் மாரக்கெட் செல்லும் சாலையோரம் இரு ஆட்டோக்களை நிறுத்த அனுமதித்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை, 3:00 மணியளவில் டிரைவர் முகமது பிலால் குறிப்பிட்ட இடத்தில் ஆட்டோவை நிறுத்தி, வண்ணாரபேட்டைக்கு, 50 ரூபாய் வாடகைக்கு பயணிகளை ஏற்றினார். அப்போது அங்கு வந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்தி கணேஷ், 1,500 ரூபாய் அபராதம் விதித்தார். இதனால், டிரைவர்கள் ஒன்று சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு மணிநேரம் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
வெலிங்டன் இன்ஸ்பெக்டர் முரளிதரன் பேச்சுவார்த்தை நடத்தி, 'இது போல் நடக்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.