விருகம்பாக்கம், விருகம்பாக்கம் மதியழகன் நகர், கே.கே., சாலையைச் சேர்ந்தவர் வேல்முருகன், 40; 'சென்டரிங்' தொழிலாளி. இவரது மனைவி வினோதினி, 37; வீட்டு வேலை செய்பவர்.
நேற்று முன்தினம், தன் கணவர் மது போதையில் தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவ பரிசோதனையில், வேல்முருகன் இறந்ததும், அவர் உடம்பில் கத்திக்குத்து காயம் இருந்ததையும் விருகம்பாக்கம் போலீசார் அறிந்தனர்.
சந்தேகமடைந்த போலீசார், வினோதினியிடம் விசாரித்தபோது, கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். வினோதினியை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது:
மது போதைக்கு அடிமையான வேல்முருகன், கடந்த 9ல், சாக்கடையில் விழுந்து கிடந்துள்ளார். வினோதினி அவரை வீட்டுக்கு கூட்டி வந்து தெளியவைத்தார்.
அவர் மீண்டும் மது குடித்து வந்து பிரச்னை செய்தார். இதில் ஆத்திரமடைந்த வினோதினி, காய்கறி வெட்டும் கத்தியை நெருப்பில் காய்ச்சி, வேல்முருகன் உடலில் சூடு வைத்தார்.
பின், கத்தியால் வேல்முருகன் வயிற்றின் இடது புறத்தில் இருமுறை குத்தினார். மயங்கி விழுந்த கணவருக்கு, வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்துள்ளார். நேற்று முன்தினம் வேல்முருகன் சுயநினைவை இழக்கவே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.