புழல், 'பொங்கல் விழா' என்ற பெயரில், மாநகர பேருந்துகளில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர்களால், பயணியர் பீதியடைந்தனர்.
சென்னை, புழல் அடுத்த காவாங்கரை பேருந்து நிறுத்தத்தில், நேற்று காலை 9:00 மணியளவில், செங்குன்றத்தில் இருந்து வள்ளலார் நகர் மற்றும் உயர் நீதிமன்றம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
அப்போது, வடசென்னையில் உள்ள கல்லுாரிகளில் படிக்கும், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், கையில் கத்தியுடன் இரண்டு பேருந்துகளில் ஏறி, தங்களது எதிர் கோஷ்டி மாணவர்களை தேடியபடி, கத்தியை பேருந்தின் கூரை மற்றும் கைப்பிடி கம்பிகளில் உரசியும் ரகளையில் ஈடுபட்டனர்.
அதனால் பேருந்தில் இருந்த பயணியர் அனைவரும் பீதியடைந்தனர். மேலும், அங்குள்ள நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணியரும், மாணவர்களின் ரகளையால், அந்த பேருந்துகளில் ஏறாமல் பயந்து ஓடினர்.
தகவல் அறிந்த புழல் போலீசார் அங்கு வந்த போது, ரகளை மாணவர்கள் தப்பிச் சென்றனர்.
போலீஸ் விசாரணையில், பொங்கல் விழா என்ற பெயரில், கோஷ்டி மோதலில் ஈடுபட திட்டமிட்டுள்ளது தெரிந்தது.
மேலும், 'ரூட்டு தல' பிரச்னையால், தங்களது எதிர் கோஷ்டி மாணவர்களை தாக்க, கத்தியுடன் வலம் வருவதும் தெரிந்தது.