சென்னையில் உள்ள கடற்கரைகளை துாய்மையாக பராமரிக்கும் வகையில், 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பெசன்ட்நகர் கடற்கரை முதலிடமும், திருவான்மியூர் கடற்கரை இரண்டாமிடமும், மெரினா கடற்கரை மூன்றாமிடமும் பிடித்துள்ளன. கடற்கரை பகுதிகளை துாய்மையாக பராமரிக்க, அதிகாரிகளிடையே போட்டியை உருவாக்கும் வகையில், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை மாநகரிலுள்ள சுற்றுலாத் தலங்களில், கடற்கரை பகுதிக்கு மக்களிடம் தனி ஈர்ப்பு உள்ளது. இங்கு உலகின் நீளமான இரண்டாவது கடற்கரையான மெரினா உட்பட, ஏழு கடற்கரை பகுதிகள் உள்ளன.
சென்னையில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய பொழுது போக்கு இடங்களாக கடற்கரை பகுதிகள் உள்ளன. மேலும், காலையில் நடைபயிற்சி போன்றவற்றுக்கும் கடற்கரை பகுதிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
தவிர, தமிழகம் மட்டுமின்றி, நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களில் இருந்து வருவோரையும், கடற்கரை பகுதிகள் கவர்ந்து வருகின்றன.
'பிளாஸ்டிக்' தடை
மேலும், வெளிநாட்டு பயணியர் அதிகளவில் வரும் இடங்களாகவும் மெரினா, கடற்கரை பகுதிகள் உள்ளன.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட கடற்கரை பகுதிகள் மது பாட்டில்கள், 'பிளாஸ்டிக்' குப்பை போன்ற வற்றால் அசுத்தம் நிறைந்தவையாக காணப்படுகின்றன. இதை சீராக்கும் வகையில், மாநகராட்சி சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி, கடற்கரை பகுதிகளில் 'பிளாஸ்டிக்' பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மக்கும், மக்காத குப்பையை சேகரிக்கும் வகையில், இரண்டு விதமான குப்பைத் தொட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு வைக்காத கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஒவ்வொரு பகுதியையும், காலை மற்றும் மாலை நேரங்களில் துாய்மைப்படுத்தும் வகையில், ஒவ்வொரு வாரமும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இதில், கடற்கரை பகுதிகளுக்கு துாய்மை அடிப்படையில், 'ரேங்க்' பட்டியல் தயாரிக்கப்பட்டு, முதலிடம் பிடிக்கும் கடற்கரையை பராமரிக்கும் துாய்மை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கவுரவிக்கப்படுகின்றனர்.
பாராட்டு
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கூறியதாவது:
சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களாக கடற்கரை பகுதிகள் காணப்படுகின்றன. இவற்றை துாய்மையாக பராமரிக்கும்படி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேரு ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, துாய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடற்கரையை பராமரிக்கும் துாய்மை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், கடற்கரையில் எத்தனை முறை சுத்தம் செய்கின்றனர்; கடற்கரையின் சுகாதாரம்; அங்குள்ள கடைகளில் இரண்டு விதமான குப்பைத் தொட்டி போன்றவற்றின் வாயிலாக கடற்கரைகள் மதிப்பிடப்பட்டு 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்படுகிறது.
தற்போதைய ஆய்வில், பெசன்ட்நகர் கடற்கரை முதலிடமும், திருவான்மியூர் கடற்கரை இரண்டாமிடமும், மெரினா கடற்கரை மூன்றாமிடமும் பிடித்துள்ளன.
இதில், ஒவ்வொரு முறையும், பட்டியலில் மாறுபாடு இருந்து கொண்டே இருக்கும்.
அப்போது, எந்தெந்த கடற்கரைகள் முதலிடம் பிடிக்கின்றன என்ற அடிப்படையில், அங்கு பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் துாய்மை பணியாளர்கள் பாராட்டப்படுவர்.
இதன் வாயிலாக, கடற்கரை பகுதிகளை பராமரிப்பதில், அதிகாரிகளிடையே ஆரோக்கியமான ஒரு போட்டியை உருவாக்கி உள்ளோம்.
சென்னையில் உள்ள கடற்கரையில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் போன்றவை காணப்பட்டால், பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடற்கரைகள் ரேங்க்பெசன்ட்நகர் முதலிடம்திருவான்மியூர் 2ம் இடம்மெரினா 3ம் இடம்திருவொற்றியூர் 4ம் இடம்பாலவாக்கம் 5ம் இடம்அக்கரை 6ம் இடம்நீலாங்கரை 7ம் இடம்
- நமது நிருபர் -