சென்னை, போகி பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் பயன்பாடற்ற நிலையில் இருந்த 89 ஆயிரத்து 500 கிலோ பொருட்களை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் சேகரித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
போகி பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், இன்று மற்றும் நாளை, வீடுகளில் பழைய துணி, 'டயர், ரப்பர் டியூப், பிளாஸ்டிக்' பொருட்களை எரிக்க வேண்டாம் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த பொருட்களை, மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, 8ம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை 89 ஆயிரத்து 500 கிலோ பயன்பாட்டில் இல்லாத பொருட்களை, பொதுமக்களிடமிருந்து துாய்மை பணியாளர்கள் சேகரித்துள்ளனர்.
இந்த பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு, மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது. பயன்படுத்த இயலாத பொருட்கள் எரியூட்டி சாம்பலாக்கும் ஆலைக்கு அனுப்பப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டப்படும்.
எனவே, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், தங்களிடம் உள்ள பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் எரிப்பதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மாறாக, தங்கள் இல்லங்களில் திடக்கழிவுகள் சேகரிக்க வரும் துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.