கால்வாய் பணிகள் நடைபெறவில்லை
உடுமலை அருகே ஆலாம்பாளையத்தில், ஊராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் கட்டுவதற்காக, கடந்த 2 மாதங்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பிறகு பணிகள் நடைபெறவில்லை. இப்பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் இப்பணியை விரைவு படுத்த வேண்டும்.
- தினேஷ், பள்ளபாளையம்.
நிழற்கூரை பராமரிக்கணும்
உடுமலை பழநி ரோடு, காந்திநகரில் நிழற்கூரை உள்ளது. இங்கு பராமரிப்பின்றி, தேவையற்ற பொருட்களும் போடப்படுகிறது. இதனால், மக்கள், பயணியர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, நிழற்கூரையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன், உடுமலை.
மின்வாரியம் கவனத்துக்கு...
மடத்துக்குளம் பகுதியில், விவசாயத்திற்கு மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுவதில்லை. விட்டுவிட்டு வழங்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் மின்சாரத்திற்காக, தோட்டத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- திருமலைசாமி, மேற்கு நீலம்பூர்.
பஸ் ஸ்டாண்டால் இடநெருக்கடி
உடுமலை பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாமல் உள்ளது. போதிய ரேக்குகள் இல்லை. இதனால், அங்கு இடநெருக்கடி ஏற்படுகிறது. எனவே, பஸ் ஸ்டாண்ட்டை விரிவுபடுத்தி, பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
- கார்த்திக், உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு, நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, வாகனங்கள் நிறுத்துவதை போலீசார் முறைப்படுத்த வேண்டும்.
- முருகன், உடுமலை.
கூடுதல் பஸ்கள் இயக்கணும்
உடுமலையிலிருந்து, கிராமங்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், கிராம மக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாந்தி, உடுமலை.
பார்க்கிங் வசதி இல்லை
உடுமலை, அருகே திருமூர்த்திமலைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். அவர்கள் வரும் வாகனங்களை நிறுத்த அங்கு போதிய இடவசதியில்லை. இதனால், நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அங்கு பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும்.
- ராஜேந்திரன், உடுமலை.
பாதையை சீரமைக்கணும்
திருமூர்த்திமலையில் பஞ்சலிங்கம் அருவி உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். அவர்கள் செல்லும் பாதை, கரடு, முரடாக உள்ளது. இதனால், குழந்தைகள், பெண்கள், முதியோர் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, அங்கு பாதையை சீரமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- லாவண்யா, உடுமலை.
பூங்காவை அழகுபடுத்தணும்
உடுமலை அருகே அமராவதி அணையில் சிறுவர் பூங்கா உள்ளது. இப்பூங்கா பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்படுகிறது. இதனால், அங்கு வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைகின்றனர். எனவே, பொதுப்பணித்துறையினர் இப்பூங்காவை, சீரமைத்து அழகுபடுத்த வேண்டும்.
- குருமூர்த்தி, உடுமலை.
பஸ் ஸ்டாண்ட் வேண்டும்
உடுமலை அருகே கொமரலிங்கம் பஸ் நிறுத்தம், பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாக உள்ளது. உடுமலை- பழநி ரோட்டுக்கு மாற்றுப்பாதையாகவும் உள்ளது. ஆனால், இங்கு பஸ்கள் நிறுத்த இடமில்லாமல் உள்ளது. எனவே, கொமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன், உடுமலை.