மயிலாப்பூர், மயிலாப்பூர் பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாப்பூர், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, போக்குவரத்து முக்கியத்துவம் உள்ள சாலையாக உள்ளது. இந்த சாலையில் உள்ள, 'லஸ்' பகுதி நிறுத்தத்தில் இருந்து ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, மாநகர பேருந்தில், ஏராளமானோர் நாள்தோறும் பயணிக்கின்றனர்.
ஆனால் அந்த நிறுத்தத்தில், பயணியர் பயன்பாட்டிற்கான 'நிழற்குடை' இல்லை. இதனால் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகின்றனர்.
நிழற்குடை இல்லாததால், பேருந்திற்காக சாலையை ஆக்கிரமித்து பயணியர் நிற்கின்றனர். இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் உண்டாகி வருகிறது.
இதுகுறித்து பயணியர் சிலர் கூறியதாவது:
இந்த பகுதியில் நிழற்குடை இல்லாததால் மழை, வெயில் காலங்களில், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இதனால், பயணியர் அவ்வப்போது, சாலையை ஆக்கிரமித்து நிற்க வேண்டிய சூழலும் உள்ளது.
இதைத் தவிர்க்க, இப்பகுதியில் நிழற்குடை அமைத்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால், இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக பரிசீலித்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.