கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில்கடந்தாண்டு 14.56 கோடி ரூபாய்க்குகாய்கறிகள் விற்பனையானது. உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்விவசாயிகள்மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோமுகி, மணிமுக்தா ஆகிய 2 அணைகள் மூலம் பாசன வசதி பெற்றுள்ள கள்ளக்குறிச்சி பகுதிகளில், ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
இந்த காய்கறிகளை விவசாயிகளிடமிருந்து இடைத்தரகர் இன்றி வியாபாரம் செய்வதற்காகவும்; நுகர்வேர்ர்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் 8ம்தேதி தி.மு.க., ஆட்சியில் கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உழவர் சந்தை துவங்கப்பட்டது.
வேளாண்மை துணை இயக்குனர் (பொறுப்பு) சத்தியமூர்த்தி கண்காணிப்பில், நிர்வாக அலுவலர் இசைச்செல்வன் உழவர் சந்தையை நிர்வகித்து வருகிறார்.
இங்கு 92 கடைகள் உள்ளன. 458 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 8 முதல் 12 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 100 முதல் 120 விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். 1,750 நுகர்வோர் வரை காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது.
மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக இருந்து வந்த உழவர் சந்தையின் அவல நிலைகளைப் போக்கி முழுவதும் சிமென்ட் தளமாக மாற்றப்பட்டது.
அத்துடன் சமீப நாட்களாக இந்த உழவர் சந்தை மாலை நேரத்திலும் இயங்கி வருகிறது. மாலை 4:00 மணி முதல் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
காலை நேரங்களில் காய்கறிகளை வாங்க முடியாத நபர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சந்தைக்கு வரத்துவங்கி உள்ளனர். நாளுக்கு நாள் நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் மட்டுமின்றி, மகளிர் சுயஉதவிக்குழுவினர் வெளிச்சந்தைகளுக்கு சென்று கேரட், பீட் ரூட், பீன்ஸ், காளி பிளவர் உள்ளிட்ட காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த 2022 ஜனவரி 1ம் தேதி டிசம்பர் 31ம் தேதி வரை ஓராண்டில் 38 ஆயிரத்து 782 விவசாயிகள், 3,777 டன் பசுமை காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதன்மூலம் 14 கோடியே 56 லட்சத்திற்கு விற்பனை ஆகியுள்ளது. 5 லட்சத்து 22 ஆயிரம் 572 நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர்.