கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு உதவி தொகைக்கான வயது தளர்வு முகாமில் 142 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த் துறை மூலம் மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கு பயனாளிகள் தேர்வுக்கான வயது தளர்வு சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
முகாமிற்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். தனி துணை தாசில்தார் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்து 18 வயத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவர்கள், சிறுமிகள் என 144 பேர் பங்கேற்றனர்.
இதில், அரசு மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவர் ஜீவா, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கணேஷ், கண் மருத்துவர் காயத்ரி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். மாற்றுத்திறனாளி சிறுவர்கள் 142 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தனித் துணை தாசில்தார் ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.