மாமல்லபுரம்:மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் 'ஹேண்ட் இன் ஹேஹண்ட்' நிறுவனம் இணைந்து, நேற்று, அர்ஜுனன் சிற்பம் பகுதியில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
அத்துடன் 'பிளாஸ்டிக்' ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து, மகளிர் சுய உதவிக் குழுவினரிடம், கோலப் போட்டி நடத்தி, சிறந்தவற்றுக்கு பரிசளித்து, சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
புகையின்றி போகியை கொண்டாடுவது குறித்து, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி மாணவ - மாணவியர், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் பேரணி சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. பேரூராட்சித் தலைவி வளர்மதி, சுகாதார ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.