நெய்வேலி : எதிர் தரப்பினரை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 21ல் நாட்டு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.பி., சக்தி கணேசன் உத்தரவின்படி, டெல்டா பிரிவு சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பாபு, தாஸ் உள்ளிட்ட தனிப்படையினரும், தெர்மல் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் அழகிரி உள்ளிட்ட 2 தனிப்படையினர் அங்கு சென்றனர்.
அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் டவுன்ஷிப் வட்டம் 3, விவேகானந்தர் சாலையைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் அகிலன் 22, வட்டம் 21ஐ சேர்ந்த 16 வயது சிறுவன், எனத் தெரிந்தது.
மேலும், விசாரணையில், வட்டம் -21ஐ சேர்ந்த சிவா தலைமையிலான கோஷ்டிக்கும், மகேஷ் தலைமையிலான மற்றொரு கோஷ்டிக்கும் 2020ம் ஆண்டு மோதல் ஏற்பட்டது. இதில், சிவா வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதற்கு பழிக்கு பழியாக சிவாவின் தந்தை வீரமணி தன்னையும், கொலை செய்து விடுவார் என்ற அச்சத்தில் அவரை, மகேஷ் கொலை செய்தார்.
இந்த வழக்குகளில் கடந்த நவ., மாதம் ஜாமினில் வெளியே வந்த மகேஷை, சிவா ஆதரவாளர்கள் வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றனர். அவர், உயிர் தப்பினார்.
இதையடுத்து மகேஷ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வீரமணி ஆதரவாளர்களை கொலை செய்ய திட்டமிட்டது தெரிந்தது.
இவர்கள், அளித்த தகவலின்பேரில் வட்டம் 4ல் தைல மரத் தோப்பில் பதுக்கிய 7 வெடி குண்டுகளும், சிறுவன் வீட்டில் பதுக்கிய ஒரு வெடி குண்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக தெர்மல் போலீசார் வழக்குப் பதிந்து, 16 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும், மகேஷை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
சென்னையில் இருந்து வந்து போலீசார் முத்துமணி தலைமையிலான வெடிகுண்டு பிரிவினர், வட்டம் 30ல் உள்ள முந்திரிக்காட்டில் நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.