சென்னை:மின் தேவையை பூர்த்தி செய்வதில், சூரியசக்தி மின்சாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதால், நேற்று முன்தினம் இதுவரை இல்லாத வகையில், 4,480 மெகா வாட் கொள்முதல் செய்து, மின் வாரியம் சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில், சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல் மின்சாரம் கிடைக்கும் சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால், பல நிறுவனங்களும் அந்த மின் நிலையங்களை அமைத்து வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, 5,820 மெகா வாட் திறன் உடைய சூரியசக்தி மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு, மின் வாரியம் வாங்குகிறது.
மின் தேவை
மழை பெய்யும் நாட்கள் தவிர்த்து, மற்ற நாட்களில் சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, தினமும் சராசரியாக 2,500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
தினமும் சராசரியாக, 15 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ள தமிழக மின் தேவையை, அனல், நீர், எரிவாயு, சூரியசக்தி ஆகிய வகை மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. சீசன் காலத்தில் காற்றாலைகளில் இருந்து அதிக மின்சாரம் கிடைக்கிறது.
மின் தேவையை பூர்த்தி செய்வதில், சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்திற்கு, மின் வாரியம் முன்னுரிமை அளிக்கிறது. எனவே, அந்த மின்சாரத்தை அதிகம் கொள்முதல் செய்து வருகிறது.
முறியடிப்பு
இம்மாதம், 1ம் தேதி சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து அதிக அளவாக, 4,317 மெகா வாட் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்து சாதனை படைக்கப்பட்டது. இந்த சாதனை, 11ம் தேதி முறியடிக்கப்பட்டது.
அன்று, இதுவரை இல்லாத அளவாக, 4,480 மெகா வாட் சூரியசக்தி மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின் வாரியம் புதிய சாதனை படைத்துள்ளது.