அவலுார்பேட்டை : வளத்தி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வட மாநில சொகுசு பஸ் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்தால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டம், வளத்தி அடுத்த ஞானோதயம் சோதனைச் சாவடியில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி, வளத்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் வழியாக செஞ்சி நோக்கி வந்த 'என்எல் 01 பி 1158' எண்ணுள்ள வெளி மாநில சுற்றுலா சொகுசு பஸ்சை போலீசார் நிறுத்தியபோது, நிற்காமல் வேகமாக சென்றது.
பஸ்சை துரத்திச் சென்று நிறுத்தினர். பஸ்சை பைக்கில் துரத்திச் சென்றதில் போலீஸ்காரர் யுவராஜ் கீழே விழுந்ததில் கால் எலும்பு முறிந்தது. பஸ்சில் இருந்து 3 பேர் தப்பியோடினார்.
போலீசார் துரத்திச் சென்று 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், மதுரை, திருநகரைச் சேர்ந்த பஸ் டிரைவர் நடராஜன், கிளீனர் அருண் என தெரியவந்தது. பஸ்சை சோதனை செய்ததில், 29 பாக்கெட்டுகளில் 65.500 கிலோ கஞ்சா மற்றும் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட வெளி மாநில பிராந்தி பாட்டில்கள் 15 கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், விசாரணையில் மதுரையில் வேலை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை பீகார், பாட்னா உள்ளிட்ட அவர்களது சொந்த ஊரில் விட்டு திரும்பி வந்த போது, கஞ்சா மற்றும் பிராந்தி பாட்டில்களை மதுரை பகுதிகளில் விற்பனை செய்வதற்காக பீகாரிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து டிரைவர் நடராஜன், 39; அருண், அவரது நண்பர் உட்பட 3 பேர் மீது வளத்தி போலீசார் வழக்கு பதிந்து டிரைவர் நடராஜனை கைது செய்து, கஞ்சா, பாட்டில்கள் மற்றும் சுற்றுலா சொகுசு பஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பஸ் வளத்தி காவல் நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு 7:30 மணிக்கு திடீரென மர்மமான முறையில் பஸ் தீ பிடித்து எரிந்தது.
மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் எரிந்ததால் பரபரப்பு நிலவியது.